காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ டிகேஎஸ்எம் மீனாட்சி சுந்தரம்

 
தமிழகம்

காரைக்கால் திருமலைராயன்பட்டினம் காந்தி பூங்காவில் முதல் முறையாக காந்தி ஜெயந்தி விழா

வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி பூங்காவில் முதல் முறையாக காந்தி ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆண்டு தோறும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் மட்டுமே மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளதால், இங்கு காந்தி ஜெயந்தி விழாவை நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்பேரில், இன்று திருமலைராயன்பட்டினம் காந்தி பூங்காவில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில், அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டிகேஎஸ்எம் மீனாட்சி சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் காட்கே, துணை ஆட்சியர் பாலு என்கிற பக்கிரிசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி கு.அருணகிரிநாதன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

காந்தியின் போதனைகள், சிந்தனைகள், அறவழியிலான செயல்பாடுகள், சமூகத்துக்கான பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சியில் பேசப்பட்டது. மும்மத கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

SCROLL FOR NEXT