விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இதன் ஆளுமைக்கு உட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை 7 வயது சிறுமி மாயமானார்.
உள்ளூர் போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டும் பலன் இல்லாததால் சிபிசிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. 30 நாட்கள் கடந்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
வன பகுதியில் சிபிசிஐடி போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது, எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடைத்தது. மேலும் திருட்டு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் அதிகளவில் பதிவானது.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு முயற்சி மேற் கொண்டும் பலன் இல்லை. இதையடுத்து காவல் நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, தடைகளை நீக்கி, வெற்றி பெற கணபதி ஹோமத்தை ஆய்வாளர் சுரேஷ்பாபு நேற்று நடத்தி இருக்கிறார்.
தனது மனைவி மற்றும் காவலர்களுடன் கணபதி ஹோமத்தை பய பக்தியுடன் நடத்தி முடித்திருக்கிறார். சத்தியமங்கலம் காவல் நிலைய காவலர்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.