ஜி.ராமகிருஷ்ணன் | கோப்புப் படம்
எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜாவை ஆதரித்து, நேற்று பந்தலடியில் அவர் பேசியது: ஊக்கத் தொகை கொடுப்பதால் நெல் சாகுபடியை விவசாயிகள் அதிகளவில் செய்வார்கள் என்பதால், ஊக்கத் தொகை தருவதை நிறுத்தி வேண்டும் என தமிழக முதல்வருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பியபோது மறுத்த நிர்மலா சீதாராமன், அதன்பின்னர் அதற்கு வேறு காரணங்கள் கற்பிக்கிறார்.
இதை நிறுத்தச் சொல்பவர்கள், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 எப்படி தர முடியும்? இதுகுறித்து கேள்வி எழுப்பினால் கூட்டணி வேறு, கொள்கை வேறு என பழனிசாமி கூறுகிறார். சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு தகுதி இல்லை. எந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.