தமாகா-வின் 12-வது ஆண்டு தொடக்கவிழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைவர் ஜி.கே.வாசன். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஈரோட்டில் டிச.20-ல் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸில் இணைய உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமாகாவின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஜி.கே.வாசன் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் ஆசியோடு, தமிழ் மாநில காங்கிரஸ் 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
காந்திய வழியில் கட்சியை நடத்தும் காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், தனது இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்க உள்ளார். ஈரோட்டில் டிச.20-ம் தேதி நடைபெறும் விழாவில், காமராஜர் மக்கள் இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்கிறார்.
நல்லவர்கள், ஊழல் அற்றவர்கள், வெளிப்படை தன்மையோடு செயல்படுபவர்களின் துணை அனைவருக்கும் தேவை. நல்லாட்சி, தூய்மையான ஆட்சிக்கு இதுபோன்ற இணைவு அவசியம்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது.
தேர்தல் வியூகம் அடிப்படையில் கூட்டணி வெற்றிபெற பிரகாசமாக வாய்ப்பை ஏற்படுத்துகிறோம். தமிழக அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அந்த தாக்கம் எதிர்மறை வாக்காக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.