தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா விலகுவதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 2019 மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
பின்னர், அதிமுக ஆதரவுடன் ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்.பி ஆனார். 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், 6 இடங்களில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதும், தமாகா கூட்டணியில் நீடித்தது. அந்த தேர்தலில் 3 இடங்களில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 5 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமாகாவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அடுத்து வருவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ரீதியாக வெற்றி பெற என்ன தேவை? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியின் நிர்வாக அமைப்பை சீரமைக்க ஜி.கே.வாசனுக்கு முழு அதிகாரம், தேர்தல் முடிந்த நிலையில் தமாகா தனி நிலைப்பாட்டில் பயணித்தல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, சக்தி வடிவேல், பொருளாளர் ராமன், மாநில நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்பு அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது.
ஆனால் 2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், கூட்டணிகளில் தமாகா பங்கு பெற்றும், எங்களது இலக்கை எங்களால் அடைய முடியவில்லை. குறிப்பாக கடந்த 3, 4 தேர்தல்களில் எங்களது கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மேலும் கூட்டணியில் இருக்கும் போது கட்சியின் பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் குறைவதாகவும், கூட்டணி அரசியலில் கட்சியின் வளர்ச்சி குறைவதாகவும் நிர்வாகிகள் கருதுகின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
அதேநேரம் தேர்தல் இல்லாத நேரத்தில் மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் தங்களுடைய கட்சிப் பணியை பொறுப்புணர்வுடன் செய்யக்கூடிய நிலை ஏற்பட வேண்டும்.
அதற்கு உள்ளாட்சி தேர்தல் வரும் வரை தமாகா தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா நட்பு கட்சியாகவே விலகுகிறது.
இனி எங்களை வலுப்படுத்தி கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார்.
தவெகவா? திமுகவா?
இதற்கிடையே கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கேட்டபோது, அடுத்து தவெக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்து வரும் தேர்தல்களை சந்திப்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.