சென்னை: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியின் கேன்டீனில் வேலை செய்து வந்த இளம்பெண், கேன்டீன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
கல்வியை கற்றுக்கொடுக்கும் வளாகத்திலேயே மனிதாபிமானம் இல்லாமல் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது பயம் இல்லாத நிலையையே எடுத்துக் காட்டுகிறது. தமிழக அரசு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்து, அது பொதுவெளியில் தெரியும் பட்சத்தில் தான் குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும்.
எனவே, பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.