தமிழகம்

இலவச ஃபிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000 - அதிமுக தேர்தல் அறிக்கை 2026 முக்கிய அம்சங்கள்

297 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை அதிமுக தலைமமையகத்தில் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

> தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.

> வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 ரூபாய் சிறப்பு உதவி தொகை வழங்கப்படும்.

> மகளிர் போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திடம் செயல்படுத்தப்படும்.

> குலவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்.

> வீடு இல்லாதவர்களுக்கு ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் வீடுகள் கட்டித் தரப்படும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

          

> 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

> அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூபாய் 25,000 மானியம் வழங்கப்படும்.

> முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

> மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்யப்படும்.

> ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

> தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும்போது உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

> சிறுபான்மை வகுப்பை சேர்ந்த பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும்

> வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 2000 ரூபாயும், +2 படித்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாயும் உதவி தொகை வழங்கப்படும்.

> ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்.

> தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும்.

> இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிப்பதன பெட்டி விலை இல்லாமல் வழங்கப்படும்.

> குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள வரும் விலையில்லா அரிசியோடு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.

> நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.3500 என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

> கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4500 என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

> சிறு குறு விவசாயிகள் உரம் விதைகள் வாங்க உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 15,000 வழங்கப்படும்.

> தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

> விவசாயப் பணியின் போது விவசாயிகள் இடி மின்னல் தாக்கியோ, விஷ பாம்பு கடித்து, வனவிலங்குகள் தாக்கப்பட்டோ உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

> முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கி வைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

> கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5%-லிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

> கல்வி தொலைக்காட்சி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

> 2000 அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் துவக்கப்படும்.

> பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் வைப்பு நிதியாக வழங்கப்பட்டிருந்த முதலீட்டு தொகை 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

> பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் திருமண உதவி திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணம் உதவி திட்டத்தின் கீழ் விலையில்லா பட்டு வேட்டி சட்டை, புட்டு சேலைகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 297 அறிவிப்புகள் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT