தமிழகம்

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அரசு அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யவும், மக்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும்; இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் இவ்வரசு இதன் மூலம் ஆணையிடுகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணக் கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT