படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்
சோழபுரம் - தஞ்சாவூர் இடையேயான நான்கு வழிச்சாலை கும்பகோணம் வட்டத்துக்கு உட்பட்ட பொன்மான் மேய்ந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 2018-ல் தொடங்கியது. இதில், தஞ்சாவூர்- சோழபுரம் இடையே 47.84 கி.மீ, சோழபுரம்- சேத்தியாதோப்பு வரை 50.48 கி.மீ, சேத்தியாதோப்பு- விக்கிரவாண்டி வரை 65.96 கி.மீ என 3 பிரிவுகளாக மொத்தம் 164.28 கி.மீ தொலைவுக்கு 3 கட்டங்களாக சாலைப் பணிகள் நடைபெற்றன. இதில், சோழபுரம்-தஞ்சாவூர் வரையிலான சாலைப் பணிகள் நிறைவடைந்ததால் 2025, ஜன.24-ம் தேதி முதல் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ராமேசுவரத்தில் 2025,ஏப்.6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சோழபுரம்- தஞ்சாவூர் பகுதி 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில், இந்த சாலையில் தஞ்சாவூர்- கும்பகோணத்துக்கு இடையே பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே உள்வாங்கியும், சில இடங்களில் இரண்டாக பிளந்து விரிசலடைந்தும் காணப்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேதமடைந்து வரும் சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என வாகன ஒட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் தன.விஜயகுமார் கூறியது: நான்கு வழிச்சாலை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே, சோழபுரம்-தஞ்சாவூர் இடையிலான 4 வழிச்சாலையில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் என அனைத்தும் இந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொன்மான் மேய்ந்தநல்லூர், கரூப்பூர் மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் அந்த நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 அங்குல அளவுக்கு சாலை உள்வாங்கி உள்ளதால், இலகுரக மற்றும் இருசக்கர வாகனத்தில் வேகமாக வரும்போது நிலைதடுமாறும் நிலை ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், பலத்த மழை பெய்யும்போது, சாலை மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது. அந்த சமயங்களில் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் நிலை கேள்விக் குறியாகும்.
பிரதமர் மோடி, இந்தச் சாலையை நாட்டு்க்கு அர்ப்பணித்த 7 மாதங்களுக்குள்ளேயே சாலை சேதமடைந்து வருவது வேதனையான விஷயமாகும். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குள் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.