தேன்மொழி, திஷா மிட்டல், முத்தரசி, கீதாஞ்சலி

 
தமிழகம்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பெண் போலீஸ் அதிகாரிகள் குழு நியமனம்

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். இந்தக் குழுவில் 4 பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஏழை சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் வீரமணி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை சிறுமிகளைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை புரிந்தது தெரிய வந்தது. இந்நிலையில், வீரமணியால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை அவரது உதவியாளர் சாந்தி தரப்பினர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். அதை காண்பித்து வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணமும் பறித்துள்ளனர். வீரமணி தொடர்புடைய வீடியோ சாந்தி மட்டுமன்றி பலருக்கும் பரவியுள்ளது. அதன்பின், வீடியோ விவகாரத்தைக் கூறியே வீரமணியைப் பலரும் மிரட்டி பணம் பெற்றுள்ளனர். இதன் பின்னணியில் பெரும் கும்பலே இருந்துள்ளது.

இந்நிலையில்தான் 2024-ம் ஆண்டே வீரமணியின் பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் சென்னை காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் குற்றம் சாட்டினார்.

வீரமணி பாலியல் வன் கொடுமை வழக்கு விசாரணையில் சுணக்கம் காட்டியதாகப் போலீஸ் அதிகாரிகள் அருண் மற்றும் கண்ணன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

மீண்டும் சோதனை

இதற்கிடையில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் நேற்று தீவிர விசாரணை நடந்தது. மேலும், தேனாம்பேட்டையில் உள்ள அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று போலீஸார் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சாந்தி மறைத்து வைத்திருந்த மேலும் சில வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்களைப் போலீஸார் கைப்பற்றினர். மேலும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது இந்த வழக்கின் விசாரணைக்கு கூடுதல் ஆதாரங்களாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

டிஜிபி உத்தரவு

இந்நிலையில், வீரமணி வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளி களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்தக் குழுவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி, சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல், எஸ்.பி.யும் தமிழக காவல் துறை ஊடகத் தொடர்பு அதிகாரியுமான ஜெ.முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் அளிக்கும் பதில்களை வாக்குமூலமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்வார்கள். தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதோடு, பாதிப்புக்கு உள்ளான சிறுமிகளிடமும் தகவல்களைத் திரட்டுவார்கள். முக்கிய குற்றவாளியான வீரமணியிடம் தனியாக விசாரிப்பார்கள்.

அவரது பாலியல் வன்கொடுமைகள், சம்பந்தப்பட்ட சிறுமிகள் விவரம், அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் தொடர்பான விவரங்களை சேகரிப்பார்கள். அதைத் தொடர்ந்து சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் கணேசனிடம் தனித்தனியாக விசாரணை நடைபெறும். இந்த விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் உடனடியாக நேற்று விசாரணையைத் தொடங்கினர். குறிப்பாகக் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரைச் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

வீரமணி வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புலனாய்வில் அனுபவம் மிக்கவர்கள்

சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி தேன்மொழி, சிறந்த புலனாய்வு அதிகாரி என பெயர் பெற்றவர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இணை ஆணையர் திஷா மிட்டல், பஞ்சாப்பைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு நேரடியாகத் தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கியவர். மயிலாப்பூர் துணை ஆணையர், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர், விழுப்புரம் டிஐஜி, வடசென்னை போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரி என பெயர் பெற்றவர்.

துணை ஆணையர் கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்டவர். பல மாவட்டங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட துப்புத் துலக்கியவர்.

SCROLL FOR NEXT