பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலமோசடி வழக்கில் நிலம் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை ஜூலை 6-ம் தேதி சார்பதிவாளர் (பொறுப்பு) ஜஸ்டின் மணிகண்டன் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்பதிவாளர், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள் - முருகதாஸ் சுவாமிகள் - தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கியோர் உள்ளிட்டோர் மீது பழநி அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவும் விசாரித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. நிலத்தை வழங்கிய பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள் சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன், மகள் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, 1880-ல் தர்ம காரியத்துக்காக எழுதிக் கொடுத்த நிலத்தின் மூலப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.
இதனிடையே நிலத்தை விற்றோர், வாங்கியோரை இதுவரை கைது செய்யாதது ஏன் என பல தரப்பிலும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அறக்கட்டளை நிர்வாகி விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை, பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்த பழநி கவுண்டன்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினமும் மற்றொருவரான பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி நேற்றும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு எஸ்பி ஷாஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் விசாரித்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் மதுரைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, ஜஸ்டின் மணிகண்டன் நேற்று 3-வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். அவருக்கு ஆக.3 வரை நிபந்தனை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.