திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன்
திருநெல்வேலி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகியது என்றும், நட்பு அடிப்படையில் கூட்டணி தொடரும் என்றும் அதன் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நட்பு தொடரும் என்ற போதிலும் கூட்டணியில் நாங்கள் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேவைகளும் சேவைகளும் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோமே தவிர தேர்தல் காலகட்டத்தில் யாரோடு பயணிக்க வேண்டும், யாரோடு இணைய வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டி முடிவு எடுத்து அறிவிப்போம்.
கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. அதிலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு வேற எந்தக் காரணமும் கிடையாது. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது நிர்வாகிகள் அளித்த ஒப்புதலின் அடிப்படையில், சூழலுக்கு ஏற்ப அடுத்த கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நல்லாட்சி தர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், மக்களும் விரும்புகிறார்கள். ஒரு மாத காலம் தான் ஆகியுள்ளது. இப்போதே அவர்களது ஆட்சி குறித்து எந்த முடிவையும் சொல்ல முடியாது காலப்போக்கில் அடுத்த கட்ட முடிவுகளை தெரிவிப்போம். இடைத்தேர்தலில் ஏற்படும் சூழலை பொறுத்து எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மையான கட்சியின் நிர்வாகிகள் செல்கிறார்கள். எங்களது கட்சியின் நிர்வாகிகளோ பொறுப்பாளர்களோ யாரும் செல்லவில்லை. பல்வேறு கட்சிகளில் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தில் போய் சேர்ந்து விட்டார்கள்.
மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி ஆட்சி பொறுப்பை கொடுத்துள்ளார்கள். ஒரு செம்பு பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் விஷம்தான். விஷத்தை உங்களோடு சேர்த்து நீங்களும் அழிந்து போக வேண்டாம். நல்லாட்சி நடைபெற வாழ்த்துகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வர் மவுன விரதத்தை கலைக்கும் போதுதான் தமிழக மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள்.
அரசியல் மாற்றம் வேண்டும் என அவரை தேர்ந்தெடுத்தார்கள். எம்எல்ஏக்கள் 3 பேர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது பேரம் பேசி தான் நடந்துள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது” என்று அவர் தெரிவித்தார்.