தமிழகம்

“பணத்தால் எதையும் சாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் திமுக!” - ‘ஃபார்வர்டு பிளாக்’ கதிரவன் நேர்காணல்

குள.சண்முகசுந்தரம்

கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியில் இருந்த அகில இந்திய ‘ஃபார்வர்டு பிளாக்’ கட்சி இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில், 3 தொகுதிகளில் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானித்து, அதிமுக தலைமைக்கும் தங்களின் எதிர்பார்ப்பைச் சொல்லி இருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

உங்களுக்கு மூன்று தொகுதிகளை தர அதிமுக சம்மதித்து விட்டதா?

கேட்க வேண்டியது எங்களது கடமை. அண்ணன் பழனிசாமி நாங்கள் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டார். இன்னும் காலம் இருக்கிறது; காத்திருப்போம்.

2021-ல் திமுக-வுடன் இருந்த நீங்கள் இப்போது அதிமுக பக்கம் வந்தது ஏன்?

பொதுவாக சிறிய கட்சிகளை திமுக மதிப்பதில்லை. பெரிய கட்சிகளை பணத்தை வைத்து அடிமை போல் நடத்துகிறது. பணத்தால் எதையும் சாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக திமுக மாறிவிட்டது. அதனால் மதியாதார் வாசல் மிதியாதே என்று வந்துவிட்டோம்.

கடந்த தேர்தலில் அப்படியொரு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதா?

ஆமாம். கட்டாயப்படுத்தி எங்களை சூரியன் சின்னத்தில் நிற்கவைத்தார்கள். திமுக பொறுப்பாளர்கள் யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் ஆறாயிரத்து சொச்சம் வாக்குகளில் தோற்றோம். இதையெல்லாம் நாங்கள் எடுத்துச் சொன்னதையும் திமுக தலைமை காதுகொடுத்துக் கேட்கவில்லை.

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை ஒதுக்கிவைத்ததால் தான் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு பின்னடைவு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

இதை ஏற்கவே மாட்டேன். எல்லா பெரிய கட்சிகளிலும் பிளவுகள் வந்திருக்கிறது. அண்ணன் வைகோவை விட வேறு உதாரணம் தேவையில்லை. ஆனால், அவர் வாய்ஸாக இருப்பதால் இன்னும் தாக்குப்பிடிக்கிறார். மற்றவர்கள் எல்லாம் காணாமல் போனது தான் வரலாறு. ஆகவே கட்சி தான் முக்கியமே தவிர தனிப்பட்ட நபர்கள் எடுபடமாட்டார்கள்.

ஒரு காலத்தில் தேவர் கட்சியாக இருந்த அதிமுக-வை இப்போது பழனிசாமி, கவுண்டர் கட்சியாக மாற்றிவிட்டார் என்பதில் உடன்படுகிறீர்களா?

அப்படி கிடையவே கிடையாது. அவர் ஒரு திறமையான, எளிமையான முதலமைச்சராக இருந்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் அவர் நினைத்திருந்தால் எதற்காக தேவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும்?

தேவரினத்து முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இனத்தாரான ஓபிஎஸ் பக்கம் நிற்காமல் இபிஎஸ் பக்கம் நிற்பது ஏன்?

பழனிசாமியின் நல்ல ஆளுமை. அத்துடன் அதிமுக என்ற கட்சி அவரிடம் தான் இருக்கிறது. அவர்களெல்லாம் கட்சி எங்கே இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள்; இதிலென்ன தவறு?

எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் இணையத் தயார் என்று சொன்ன பிறகும் ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்க்க மறுப்பது சரியா?

இதுபற்றி நான் இபிஎஸ்ஸிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். “ஓபிஎஸ் நம்பகத்தன்மை இல்லாதவராக இருக்கிறார். போனமுறை தென் மாவட்டங்களில் சீட் கொடுத்த விஷயத்தில் கூட அதிமுக தோற்கும் விதமாகவே நடந்திருக்கிறார்கள். அதனால், மீண்டும் உள்ளுக்குள் வந்து பிரச்சினை ஏற்படுவதற்குப் பதிலாக அவர் இப்படியே இருக்கட்டுமே” என்று அவர் சொன்னது நியாயமாகவே படுகிறது. கட்சிக்குள் வரவேண்டும் என நினைப்பவர் திமுக தலைவரை ஏன் போய்ப் பார்க்க வேண்டும்?

கடந்த தேர்தலின் போது, வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததால் தெற்கில் அதிமுக பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்ததே..?

அந்த நேரத்தில் அதிமுக செய்தது தவறு தான். விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அன்றைக்கு அரசு இதை அறிவித்தபோது அண்ணன் ஓபிஎஸ், செல்லூர் ராஜு போன்றவர்கள் ஏன் எதிர்க்கவில்லை? நான் கேள்விப்பட்ட வரையில், “வன்னியரிடம் ஏன் கெட்ட பேர்... பேசாமல் போட்டுவிட்டுட்டுப் போவோம்” என்று ஓபிஎஸ் தான் சொன்னதாக தகவல். அதுமட்டுமல்ல, அதிமுக போட்ட சட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்த திமுக அரசு, பத்தரை பர்சன்ட் சட்டத்தை மட்டும் ஆட்சிக்கு வந்ததுமே அமல்படுத்தி வேலை கொடுத்ததே... அப்படியானால் யாருடைய குற்றம்?

இந்தத் தவறை சரிசெய்யத்தான் தேவருக்கு பாரத ரத்னா என்ற ஆயுதத்தை எடுக்கிறாரோ இபிஎஸ்?

எனக்கு அப்படி தோன்றவில்லை.

தமிழகத்தில் சாதிக் கட்சிகளின் காலம் முடிந்துவிட்டதோ..?

நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. திருமா, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் சாதியின் பெயரால் தானே அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு ஏன்... திமுக-வும் அதிமுக-வுமே சாதி பார்த்துத்தானே வேட்பாளர்களை நிறுத்துகின்றன... அப்புறம் எங்கே சாதி ஒழிவது?

முன்பு அதிமுக-வுக்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் இப்போது திமுக-வை தாங்கிப் பிடிக்கிறாரே?

என்றைக்குமே அவர் திமுக ரசிகர் தான். 2016-ல் நான் இரட்டை இலையில் நிற்க முடியாது என்று சொன்னதால் கருணாஸை தூக்கிக் கொண்டு வந்து நிற்கவைத்தார் ஜெயலலிதா. மற்றபடி கருணாஸ் ஒன்றும் பிறவி அதிமுக பக்தர் இல்லை.

சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை கட்சிக்குள் விட்டால் அதிமுக-வில் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கும் என்பதை ஏற்கிறீர்களா?

அது உட்கட்சி பிரச்சினை என்பதால் என்னால் ஓரளவுக்குத்தான் பேசமுடியும். என்னைக் கேட்டால், இப்போதிருக்கிற அதிமுக-வும் அதன் தலைமையும் சசிகலா தரப்பினரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் வேண்டாம் என்று நினைக்கலாம். அவர்களும் சொத்தைப் பாதுகாக்கத்தான் நிற்கிறார்கள்.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

எனக்கென்னவோ வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது போல் தான் தெரிகிறது.

SCROLL FOR NEXT