வைகோ | கோப்புப் படம்
சென்னை: “திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் நான் செய்த பெரிய தவறு” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, “பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன். பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம். கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு இடங்கள் தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள். கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.
என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச் செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்துக்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும். 2017-ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.
பொதிகை மலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது. கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான்.
நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.
முன்னதாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிய நிலையில் 2009-ம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, வைகோவை விமர்சித்து எழுதிய கட்டுரையை மீண்டும் திமுகவின் நாளேட்டில் கடந்த 11-ம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வைகோ தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.