சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைய வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார்.

 
தமிழகம்

ரூ.400 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

நவ.12 வரை சிறையில் அடைக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.400 கோடி மோசடி வழக்​கில் தலைமறைவாக இருந்த முன்​னாள் எம்​எல்ஏ-வும், அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பரு​மான முத்​துக்​குமார் நேற்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் சரண் அடைந்​தார். அதையடுத்து அவரை வரும் நவ.12 வரை நீதி​மன்ற காவலி்ல் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த திமுக ஆட்சி காலத்​தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களை வழங்க கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்​சம் வசூலித்து மோசடி செய்​த​தாக தனியார் பள்​ளி​கள் சங்க நிர்​வாகி​கள் தரப்​பில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில் அப்​போதைய பள்ளி கல்​வித்​துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ், பெற்​றோர் ஆசி​ரியர் சங்​கத் தலை​வ​ரான பி.டி. அரசகுமார், சங்க மாநில பொருளாள​ரும், விருத்​தாச்​சலம் தொகுதி முன்​னாள் எம்​எல்ஏ-வும், அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பரு​மான வி. முத்​துக்​குமார் மற்​றும் ராஜா, சுரேஷ், தினேஷ் உள்​ளிட்​டோருக்கு எதிராக சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இதில் ஏற்​கெனவே பி.டி.அரசகுமார், ராஜா, சுரேஷ் ஆகியோர் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கடந்த அக்.26 அன்று கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முன்​னாள் எம்​எல்ஏ-வான முத்​துக்​குமார், தினேஷ் ஆகியோர் தாக்​கல் செய்​திருந்த முன்​ஜாமீன் மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்த நிலை​யில், முத்​துக்​குமார் நேற்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ். சத்​தி​யமூர்த்தி முன்​பாக சரணடைந்​தார்.

அதையடுத்து முத்​துக்​குமாரை வரும் நவ.12 வரை நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கவும், சிறை​யில் முதல் வகுப்பு வழங்​கவும் நீதிபதி எல்.எஸ். சத்​தி​யமூர்த்தி உத்​தர​விட்​டார். அதையடுத்து அவரை போலீ​ஸார் புழல் சிறைக்கு அழைத்து சென்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT