மதுரை: ‘‘அதிமுக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தீக்குளித்து உயிர் நீத்த அதிமுக நிர்வாகி பூக்கடை மகேந்திரனின் உருவப்படத்துக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மதுரை அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஜான்ஸி ராணி பூங்கா முன்பு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறியதாவது: உயிர்நீத்த பூக்கடை மகேந்திரனின் வீரமரணம் அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக இயக்கம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த பாதிப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தங்களை திருத்திக்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
எம்ஜிஆர் என்ன நோக்கத்துக்காக இயக்கத்தை கண்டாரோ, அந்த நோக்கம் வெற்றியடைய வேண்டும். ஜெயலலிதா என்ன நோக்கத்துக்காக வளர்த்தெடுத்தாரோ அந்த இயக்கம் வீறுகொண்டு எழ வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியின் ஒற்றுமை கருதி, பொதுச்செயலாளரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மகேந்திரன் துயர முடிவை எடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை ஒவ்வொருவரும் ஒரு படிப்பினையாகக் கொண்டு தலைவர் முதல் தொண்டர்கள் வரை உணர்ந்து செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தன்னைப்பற்றி பேசியவர்களைக் கூட தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொண்டனர். அதேபோல், இயக்கத்தின் வளர்ச்சிதான் ஒரே குறிக்கோள் என அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு தலைவர்களும் நடந்துகொள்ள வேண்டும்.
மகேந்திரனின் மரணம் அதிமுக தொண்டர்களின் இறுதி மரணமாக இருக்க வேண்டும். கட்சி எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.