சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த கோவி.செழியன் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் எல்லா நிகழ்ச்சிகளிலும் பின்பற்றப்பட்டன. தற்போது முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான்.
இதற்கு ஒரு மசோதா கொண்டு வந்து சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றதால் அவை நிலைத்து நிற்க முடியும். மத்திய அரசு என்று சொல்லவே பயப்படும் இந்த அரசு சட்ட மசோதா கொண்டு வருமா? என்பது சந்தேகமாக உள்ளது.
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து. எனவே, சட்ட வடிவம் தேவை, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை என்றால் அன்றைய தினத்தில், எங்களது உறுப்பினர்கள் இதுகுறித்து பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.