சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது: பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் வரும், விவசாயிகளுக்கு வாழ்வு வரும், அடுத்த ஜென்மம் இருந்தால் நான் விவசாயக் குடும்பத்தில் பிறப்பேன் என முதல்வர் கூறியிருந்தார்.
அதனால் வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான். நாங்கள் விவசாயிகள் போராட்டம் இல்லாத ஆட்சியை நடத்தினோம்.
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்: போராட்டம் நடத்திய விவசாயிகள் குண்டர் சட்டத்தை போட்ட அரசுதான், இவர்களது அரசு. திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கரும்பு விலை டன்னுக்கு ரூ.4,500, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் இப்போது ஊக்கத் தொகையை கிள்ளி கொடுத்திருக்கிறீர்கள்.
ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, ரூ.20 ஆயிரம் கோடி வேளாண் கடனை தள்ளுபடி செய்தார். நீங்கள் முழு கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டு, செய்யவில்லை.
அமைச்சர் காந்தி ராஜ்: அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்தால், அதன் முழு தொகையையும் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
முந்தைய அரசுகளில் பல்வேறு காலகட்டங்களில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி திட்டங்களில் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய வட்டி நிலுவைத் தொகை மொத்தம் ரூ.583 கோடி. இந்த இக்கட்டான சூழலில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இதையெல்லாம் தெரிந்துதான் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் என்றுதான் வாக்குறுதி அளித்தீர்கள்.
இதெல்லாம் தெரிந்துதான்விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. வேளாண் பட்ஜெட்டில் எங்களது ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.15,230 கோடி. உங்கள் ஆட்சியில் ரூ.14,955 கோடி ஒதுக்கப்பட்டது.
ரூ.275 கோடி குறைவாக பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மேலும் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் குறுவை பயிர் காப்பீடு திட்டங்களுக்கும் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வினோத்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாய மின் இணைப்புக்காக மின் வாரியத்துக்கு வழங்க வேண்டிய மானியமாக ரூ.8,186 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் ரூ.7,180 கோடிதான் வழங்கப்பட்டது. அப்போது தேவையைவிட ரூ.1,006 கோடி கூடு தலாக ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், விவசாய மின்சாரப் பயன்பாட்டு மானியத்துக்கு ரூ.7,432 கோடி, அதாவது ரூ.252 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேளாண்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு ரூ.7,525 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.481 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடை பெற்றது.