அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 
தமிழகம்

“அப்டேட் இல்லாத உதயநிதி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தமிழினி

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அப்டேட் இல்லாமல் பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். முன்னதாக நேற்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணிக் கூட்டத்தில், “அதிமுக இன்ஜின் இல்லாத கார் அதை பாஜக என்ற லாரி இழுத்துச் செல்கிறது.” என்று உதயநிதி பேசியிருந்தார். அதற்கு ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் இன்று (டிச.15) தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கட்சி மாறிச் சென்ற அமைச்சர் ரகுபதி அதிமுக குறித்து பேசத் தகுதியில்லை.

மேலும், நீராவி ரயிலுக்குதான் இன்ஜின் தேவை. புல்லட் ரயிலுக்கு எதற்கு?. அதிமுக புல்லட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் கட்சி. உதயநிதி ஸ்டாலின் அப்டேட் இல்லாமல் பேசுகிறார். அப்டேட் இல்லாத உதயநிதி அவரை அவரே கேவலப்படுத்திக் கொள்கிறார். திமுக ஆடிய ஆட்டத்துக்கு 3 மாதங்கள் கழித்து பதில் கிடைக்கும்.

25 ஆண்டுகள் ராயபுரம் தொகுதி வெற்றியை கொடுத்தது. களத்தில் ஒரு மாவீரனுக்கு, ஒரு விளையாட்டு வீரனுக்கு வெற்றி, தோல்வி பற்றிக் கவலையில்லை. ராயபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்கவுள்ளேன். ராயபுரம் தொகுதியை விட்டு விலகிச் செல்ல மாட்டேன். அங்குதான் போட்டியிடுவேன்” என்றார்.

பாஜக 65 தொகுதிகளை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும். இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. எல்லா கட்சிகளும் அதிகமாகத்தான் சீட் கேட்பார்கள். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT