சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்க வந்த அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் எம்எல்ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி.அன்பழகன். | படம். எல்.சீனிவாசன் |
சென்னை: ‘தேர்தலில் வென்றால் பழனிசாமி காரணம்; தோல்வியடைந்தால் மாவட்ட செயலாளர்கள் காரணமா?’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: சமீப காலமாக உண்மைக்கு மாறான தவறான தகவல்களை அக்ரி கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டு பரப்பி வருகிறார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சிக்கு வலுவான தலைமை வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பழனிசாமியை பொதுச்செயலாளராக நியமித்தோம். ஆனால், தொடர் தேர்தல் தோல்வி ஏற்பட்டதால் இதனை ஆராய வேண்டும் என வலி யுறுத்தினோம்.
சொந்த பூத்தில் குறைவான வாக்கு
சட்டப்பேரவை தேர்தலில் 47 பேர் வெற்றி பெற்றதற்கு பழனிசாமியின் சொந்த செல்வாக்குதான் காரணம் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
அப்படியானால் மீதமுள்ள தொகுதிகளில் பழனிசாமி செல்லாக் காசாகி விட்டாரா? கடந்த 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது சொந்த பூத்திலேயே அதிமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன.
அப்படியானால், சொந்த மாவட்டத்திலேயே அவர் தனது செல்வாக்கை இழந்து விட்டார் என சொல்லலாமா? வெற்றி பெற்றால் பழனிசாமி காரணம், தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் தான் காரணமா? தேர்தலில் சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் அதிமுக முற்றிலும் துடைத்தெறியப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. வட மாவட்டங்களில் பாமகவுடன் கூட்டணி அமைந்ததால்தான் சில தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
காழ்ப்புணர்ச்சியால் வீண்பழி
எனவே, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும். அதேபோல், காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது வீண் பழி சுமத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் பதவி பறிக்கப்பட்டு ஒருவரை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் சிறைக்கு சென்றவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர் எங்களைப் பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
ஒன்றிணைக்க வேண்டும்
நாங்கள் யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை. கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. தேர்தல் தோல்வியை ஏற்க பழனிசாமி மறுக்கிறார்.
1996-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு தான் பொறுப்பு என ஜெயலலிதா தைரியமாகக் கூறினார். ஒரு காலத்தில் அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 50 உறுப்பினர்கள் இருந்தனர்.
அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது. அதேபோல், 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக 65 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அந்த எண்ணிக்கை 47 ஆகக் குறைந்துள்ளது. தற்போது மேலும் குறைந்து 41 ஆகிவிட்டது. பழனிசாமி அதிமுகவை அழித்துக் கொண்டே வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.