ஜெய்பாலாஜி

 
தமிழகம்

‘அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துகளை குவித்தேன்’ - அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

மதுரை: ‘அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்தேன்’ என மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் முன்னாள் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மதுரையில் மோசடி வழக்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான பல்வேறு புகார்களை விசாரிக்க இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.

அப்போது ஜெய்பாலாஜி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் ஆர்வம் இருந்ததால் 2013-ல் மருதம் லேண்ட் புரொமோட்டர் தொடங்கி தொழில் புரிகிறேன். அதைத்தொடர்ந்து சரவணக்குமார், கணேசன், நமச்சிவாயம் ஆகியோருடன் சேர்ந்து மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் மதுரம் ப்ராபர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கினேன்.

பல்வேறு ஊர்களில் கிளைகளைத் தொடங்கினோம். 5 மற்றும் 7 ஆண்டுகள் என்ற அடிப்படையில் தவணை முறையில் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று முதிர்வுக் காலத்தில் இடம் கிரயம் செய்து கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு இடத்தைப் பதிவு செய்து தர மனமின்றி நாங்களே வைத்துக்கொள்ள முடிவெடுத்தோம்.

மருதம், மதுரம் நிறுவனம் மூலம் பணம் செலுத்தியோருக்குப் பணத்தை திருப்பித் தரவில்லை. பணம் செலுத்தியோர் தகராறு செய்தனர். எனது அரசியல் செல்வாக்கை வைத்து மற்றவர்களை சிக்கவைத்து நான் தப்பித்தேன். 2014-ல் ஜேஎஸ்வி புரமோட்டர்ஸ் என்ற பெயரில் மதுரை அண்ணா நகரில் அலுவலகம் தொடங்கினேன்.

தோப்பூர் பகுதியில் வீட்டுமனைகளை வாங்கி விற்றேன். அழகுபாண்டி என்பவருடன் சேர்ந்து 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். மேலும், ராம் அருண், ராம் ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து தொழில் செய்தேன். ராம் அருணுக்கு அரசியல்வாதிகளிடம் தொடர்பு இருந்ததால் அதைப் பயன்படுத்தினேன்.

முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் நட்பு வைத்து அதையும் பயன்படுத்திக் கொண்டேன். சில நில உரிமையாளர்களை மிரட்டி மோசடி செய் தேன். கணக்கில்லாமல் வரும் கோடிக்கணக்கான பணத்தை எனது பெயரிலும், மனைவி கலாவதி மற்றும் ராம் அருண், அவரது மனைவி சுவாதி லட்சுமி பெயரிலும் கூட்டாக இடத்தை வாங்கித் தொழில் புரிகிறோம்.

சென்னை நீலாங்கரையிலும் பல ஏக்கர் வாங்கி தொழில் செய்கிறேன். சென்னை பெருங்குடியில் நானும், இலக்குவனும் சேர்ந்து அபார்ட்மென்ட் வீடுகள், ஹோட்டல்களை வாங்கியுள்ளோம். மதுரையில் சீதாராமன் என்பவரிடம் அரசியல் பிரமுகர்களின் பெயரைப் பயன்படுத்தி அவரது வீட்டுமனை திட்டத்தில் 2 மனைகளை வாங்கி ஏமாற்றினேன்.

பல நபர்களிடம் மோசடி செய்து பணத்தை வைத்து கோவையில் நகைக்கடை மற்றும் மதுரை ஆரப்பாளையத்தில் தூரியம் ஸ்டீல்ஸ் நிறுவனத்தை நடத்துகிறேன். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறைய சொத்துகள் குவித்த நிலையில் வெளிமாநிலம் உள்ளிட்ட இடங்களிலும் முதலீடுகள் செய்துளேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT