எ.வ.வேலு

 
தமிழகம்

“முறைகேடு வழக்கில் என்னை இணைத்தது தவெக அரசின் திட்டமிட்ட செயல்” - விசாரணைக்குப் பின் எ.வ.வேலு ஆவேசம்

தமிழினி

சென்னை: “எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. தவெக அரசு என்னை திட்டமிட்டு இந்த வழக்கில் இணைந்துள்ளனர்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

அவரிடம் அதிகாரிகள் 5 மணி விசாரணை நடத்தினர். பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சிங்கப்பூர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காலை சுமார் 10.45 மணியளவில் இங்கு வந்தேன்.

விசாரணை அதிகாரி 11 மணிக்கு, பல்வேறு கேள்விக் கணைகளை முன்வைத்தார். எனக்கு மனதில் பட்ட உண்மைகளை அவரிடம் சொல்லியுள்ளேன். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பதில் சொல்லியுள்ளேன். நான் எந்தவித குற்றமும் செய்யவில்லை.

எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார் என அவர்களிடம் சொல்லியுள்ளேன். அரசு என்னை திட்டமிட்டு இந்த வழக்கில் இணைந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வெளியில் சில விஷயங்களை சொல்ல முடியாது. 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT