சென்னை: பதவி விலகிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர். அதற்கு முன்பாக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி புகார் அளித்திருந்தார்.
அதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இருமுறை 4 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவைத் தலைவர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
தொடர் விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் பதவி விலகிய முன்னாள் எம்எல் ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மரகதம் குமரவேல், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் ஆஜராகினர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்பு நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இருதரப்பையும் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தபின்னர் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.