சென்னை: கிண்டி சர்தார் படேல் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம்.
கடந்த 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலூர் அடுத்த வலையப்பட்டியில் வசிக்கிறார். இவருக்கு உலகாதிபதி (21) என்ற மகன், 2 மகள்கள் உண்டு.
சென்னை, வேளச்சேரியில் தங்கியிருந்த உலகாதிபதி, செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
வழக்கம்போல, வேளச்சேரியில் இருந்து பைக்கில் நேற்று காலை பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். கிண்டி சர்தார் படேல் சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறியுள்ளது.
இதில் உலகாதிபதி பைக்குடன் சரிந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த பொக்லைன் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உலகாதிபதி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, பொக்லைன் ஓட்டுநர் ராஜேஷை (40) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.