சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கே.தமிழரசன். உடன், அமைச்சர் பி.மூர்த்தி.

 
தமிழகம்

‘சீட்’ பெற சென்னை சென்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொந்த ஊர் திரும்பாமல் திமுகவில் தஞ்சம்!

செய்திப்பிரிவு

மதுரை: ‘சீட்’ பெறுவதற்காக சென்னையில் முகாமிட்டிருந்த மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.தமிழரசன், தனக்கு ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் சொந்த ஊர் திரும்பாமலே திமுகவில் ஐக்கியமானார்.

மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.தமிழரசன். இவர் மதுரை கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளராகவும் இருந்தார். இவர், இந்த தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ பெற முயற்சித்து வந்தார்.

அதற்காக, இவர், கடந்த சில ஆண்டுகளாகவே சட்டப்பேரவை அதிமுக துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் மூலமாகவும் ‘சீட்’ பெற காய் நகர்த்தி வந்தார்.

          

ஆனால், அவருக்கு மேலூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாமல் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள பெரியபுள்ளானுக்கே மீண்டும் அதிமுக ‘சீட்’ வழங்கியது. வேட் பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன் ‘சீட்’ பெறுவதற்காக கடந்த சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டிருந்த தமிழரசன், தனக்கு ‘சீட்’ கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார்.

அவர், சொந்த ஊருக்கு வராமல் சென்னையில் இருந்த திமுக அமைச்சரும், கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.மூர்த்தியை சந்தித்து திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தார். பி.மூர்த்தி, கட்சித் தலைமையிடம் பேசி உடனடியாக முதல்வர் முன்னி லையில் அவரை திமுகவில் இணைந்தார்.

அவருடன் அவரது தம்பி பொன்னுசாமியும் திமுகவில் சேர்ந்துள்ளார். கே.தமிழரசன், 1996-2006-ம் ஆண்டு வரை மேலூரில் பத்தினெட்டாங்குடி கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் பி.மூர்த்தியை தோற்கடித்து எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘கே.தமிழரசன், மதுரை கிழக்கு மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர்.

ஆனால், அவர் தன்னை மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதரவாளராகவே காட்டிக் கொண்டார். கிழக்கு மாவட்ட அரசியலில் ஈடுபாடு காட்டாமல், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் ஜெ.பேரவை மாநிலச் செயலாளரான ஆர்பி.உதயகுமார் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

அதனால், கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப் பாவுக்கும், தமிழரசனுக்கும் மோதல் நீடித்தது. பிறகு எப்படி, அவருக்கு கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மேலூர் தொகுதியில் ‘சீட்’ கொடுப்பார்கள். மேலும், அவரை வேண்டுமென்றால் கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியை எதிர்த்து போட்டியிட கட்சித் தலைமை அறிவுறுத்தியது.

ஆனால், அவரோ பி.மூர்த்தியை எதிர்த்து போட்டியிட விருப்பமில்லை என்றும், மேலூரில் ‘சீட்’ கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவரது இந்த கோரிக்கையை கட்சித் தலைமை நிராகரித்தது என்று கூறினர்.

SCROLL FOR NEXT