“பழனிசாமி தலைமையிலான அதிமுக-வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை” என திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சின்னசாமி தெரிவித்தார்.
காங்கிரஸின் ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகியாக இருந்தவர் ஆர்.சின்னசாமி. தேசிய ஜவுளி தொழிற்சங்க செயலாளராகவும் பதவி வகித்தார். கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட, சிஐடியூ நிர்வாகியான சவுந்தரராஜனை வெறும் 14 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இது, தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள கோவை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தார் சின்னசாமி. இதையடுத்து அதிமுக-வில் இணைந்த அவருக்கு, அதே தொகுதியில் அதிமுக சார்பில் 2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்ற சின்னசாமிக்கு 2016 தேர்தலிலும் ஜெயலலிதா வாய்ப்பளித்தார். ஆனால், அவர் அந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதிமுக-வின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்த சின்னசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 காலகட்டத்தில் டிடிவி.தினகரனின் ஆதரவாளராக மாறினார். இதனால் அப்போதைய ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டணி சின்னசாமியை கட்சியை விட்டு நீக்கியது. அதனைத் தொடர்ந்து, அவர் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடி முறைகேடு செய்தாக, அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அளித்த புகாரின் பேரில் கைதும் செய்யப்பட்டார்.
அதன் பிறகு இபிஎஸ்ஸின் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்த பிறகு, மீண்டும் அதிமுக-வில் இணைந்தார் சின்னசாமி. அவருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் இபிஎஸ். இந்நிலையில் நேற்று அவர், சென்னை, அண்ணா அறிவாலயம் சென்று, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர் சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாய் உள்ளத்தோடு என்னை திமுக-வில் இணைத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றி. நான் அதிமுக சார்பில்
2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், எனக்கு அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். நான் பொறுப்பேற்ற போது பேரவையில் வெறும் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தான் இருந்தனர். எனது முயற்சியால் 4 ஆண்டுகளில் அதை 11 லட்சமாக உயர்த்தி, அதிமுக-வுக்கு வலு சேர்த்தேன்.
இப்போது பழனிச்சாமி தலைமையிலான அதிமுக-வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. என் மீது பொய் வழக்குப் போட்டார்கள். பின்னர் அவர்களே திரும்ப பெற்றுக் கொண்டார்கள். இப்போது தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர். அதனால் ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராவது உறுதி. அதற்காக நான் பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.