தமிழகம்

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அதிமுக ஒருங்கிணைப்பை கட்சிக்குள் வலியுறுத்தியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு வருகை தந்த செங்கோட்டையனை விஜய் வரவேற்றார். பின்னர், செங்கோட்டையனுக்கு தவெக துண்டு அணிவித்து, உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். தொடர்ந்து, முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், முத்துகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் எம்எல்ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஏ.யு.அசனா ஆகியோரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்து 11.30 மணி அளவில் விஜய் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: அதிமுகவில் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு, அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அப்போதுதான் 1987-ல் ஜெயலலிதா வழியில் நான் பயணத்தை மேற்கொண்டேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மூன்றாகப் பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் கருத்துகளை வலியுறுத்தி னோம். ஆனால், செயல்படுத்த முடியவில்லை.

ஏன் தவெகவில் இணைந்தீர்கள்? என நீங்கள் கேட்க கூடும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இன்று திமுக வேறு, அதிமுக வேறு இல்லை. இரண்டுமே ஒன்றாக இணைந்துதான், பயணித்து வருகின்றன.

தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கு, வெற்றி பயணத்தை மேற்கொண்டுள்ள விஜய், ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறார். தமிழகத்தில் புதிய மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். விஜய்யின் பயணத்தை மக்கள் முழு மனதோடு வரவேற்கிறார்கள்.

எனவே, மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற, மக்களால் உருவாக்கப்படுகிற ஒரு புனித ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெறுவார். 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி, வெற்றி என்ற இலக்கை அவர் எட்டுவார்.

நான் சேகர்பாபுவை சந்தித்து பேசவில்லை. தவெக ஜனநாயக கட்சி. யார் வேண்டுமானாலும், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுடைய படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியில் முக்கிய பதவி: தவெகவில் இணைந்த செங்கோட்டையனை நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாள ராக நியமித்து விஜய் அறிவித்துள்ளார். இது, கட்சியில் விஜய்க்கு அடுத்தபடியான பொறுப்பு என கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்படுகிறார். கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT