தமிழகம்

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் தொழிலாளர்களை புலி தாக்கியதா? - வனத்துறை விளக்கம்

ஆ.நல்லசிவன்

பழநி: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை புலி தாக்கி காயமடைந்ததாக தகவல் பரவிய நிலையில் வனத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் சோலை மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு, அந்நிய மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புலி தாக்கியதில் தொழிலாளர்கள் சிலர் காயமடைந்ததாக தகவல் பரவியது. இதற்கு வனத்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலாளர்கள் எவரும் புலியால் தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இத்தகைய சம்பவம் நடைபெற்றதாக உறுதிப் படுத்தக்கூடிய தகவல்கள் ஏதுமில்லை.

எனவே, பேரிஜம் வனப்பகுதியில் புலி தாக்கியதில் தொழிலாளர்கள் காயமடைந்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானதாகும். இச்சம்பவம் தொடர்பாகத் தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT