தமிழகம்

3 யானைகளை மீண்டும் சங்கர மடத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்​துக்கு சொந்​த​மான 3 யானை​களை​ மீண்​டும் மடத்​திடம் ஒப்​படைக்க எதிர்ப்பு தெரி​வி்த்து வனத்துறை தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்யப்பட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தில் நடை​பெறும் வழி​பாடு​கள், பூஜைகள், கோயில் திரு​விழாக்​களுக்​காக இந்​து, ஜெயந்​தி, சந்​தியா ஆகிய 3 யானை​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தன. இந்த யானை​களை கவனித்து வந்த யானைப்​பாகன் கடந்த 2015-ல் உயி​ரிழந்​து​விட்​ட​தால் இந்த 3 யானை​களும் வனத்துறையிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

          

அதன்​படி இந்த யானை​கள் திருச்சி எம்​.ஆர்​.​பாளை​யம் யானை​கள் காப்​பகத்​தில் பராமரிக்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் இந்த 3 யானை​களை​யும் பராமரிக்க தேவை​யான அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தால், அவற்றை கோனேரிக்​குப்​பம் யானை​கள் மையத்​துக்கு அனுப்பி வைக்​கக் கோரி காஞ்சி காமகோடி பீடம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிப​தி, காஞ்சி காமகோடி பீடத்​துக்கு சொந்​த​மான இந்த 3 யானை​களை​யும் மீண்​டும் மடத்​தின் கட்​டுப்​பாட்​டில் ஒப்​படைத்து அவற்​றின் உடல்​நிலை குறித்து அவ்​வப்​போது ஆய்வு செய்ய வேண்​டுமென வனத்துறைக்கு உத்​தர​வி்ட்​டிருந்​தார்.

தனி நீதிப​தி​யின் இந்த உத்​தரவை எதிர்த்து வனத்துறை தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மேல் ​முறை​யீட்டு மனு தலைமை நீதிபதி எம்​.எம். ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, வனத்துறை தரப்​பில், “அந்த 3 யானை​களுக்​கும் வயதாகி விட்​டது. கடந்த 2019-ம் ஆண்டு சுமார் 58 ஏக்​கர் பரப்​பில் உள்ள திருச்சி முகா​முக்கு இந்த 3 யானை​களும் மோச​மான நிலை​யில் கொண்டு வரப்​பட்​டன.

இந்த முகாமில் 8 யானை​கள் இருந்த நிலை​யில் அதில் ஒரு யானை உயி​ரிழந்து விட்​டது. தற்​போது இந்த 3 யானை​களை​யும் காஞ்சி மடத்​துக்கு அனுப்பி வைத்​தால் மீண்​டும் அவற்​றின் உடல் நிலை​யில் பாதிப்பு ஏற்​படும்.

எனவே தனி நீதிப​தி​யின் உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும். இது தொடர்​பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்​டும்” என்று கோரப்​பட்​டது. அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், “அந்த 3 யானை​களும் கடந்த 6 ஆண்​டு​களாக வனத்துறையின் பராமரிப்​பில் தானே இருந்​தன.

தற்​போது அந்த யானை​களை பராமரிக்க தேவை​யான ஏற்​பாடு​களை மடத்தின் நிர்​வாகம் செய்​துவிட்ட நிலை​யில் அந்த யானை​களை மீண்​டும் மடத்​திடம் ஒப்​படைக்க முடி​யாது என்று மறுக்க முடி​யாது.

எனவே அந்த 3 யானை​களுக்​கும் உரிய மருத்​துவ பரிசோதனை​களை நடத்தி அவற்றை சங்கர மடத்​தின் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும். தனி நீதிப​தி​யின் உத்​தர​வில் தலை​யிட எந்த காரண​மும் இல்லை'' எனக்​கூறி வனத்துறையின்​ மேல்​முறை​யீட்​டு மனுவை தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT