கோப்புப் படம்

 
தமிழகம்

காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? - சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்துவதற்கு அனுமதிப்பதாகக் கூறி, 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, சேலம் மாவட்டம், வடக்கு மல்லியக்கரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சேலம் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர, புகார்தாரர் சக்திவேல், அவரது தாயின் மொபைல் போன் பதிவுகளையும், சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்கக் கோரி உதவி ஆய்வாளர் சரவணகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், 15 நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உதவி ஆய்வாளர் தரப்பில், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் 15 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, 18 மாதங்களுக்கு பதிலாக, 15 நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டும் பராமரிக்கப்படுவது ஏன் என்று வினவிய நீதிபதி, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என்பதையும் விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT