சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிப்ரவரி 13-ம் தேதி அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.12-ம் தேதி (நாளை) வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசானது முதல் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டமும் நிலவும்.
வரும் 13-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.
வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 14-ம் தேதி அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 15-ம் தேதி அதிகாலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான பனிமூட்டமும் காணப்படும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென்மேற்கு வங்கக் கடலின் தென் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் வரும் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.