கோப்புப் படம்
சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் சென்னையில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.245 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அடையாறு மேம்பாலப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் ரூ.245.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் இருந்து பல்லாவரத்தில் உள்ள அலுவலகத்துக்கு நகைகளை கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
நகைகளைக் கொண்டு செல்ல முறைப்படி அனுமதி பெற்றுள்ளதாகவும், ஆனால் அதற்கான ஆவணங்களை கொண்டு வரவில்லை என்றும் கூறினர். இதையடுத்து, உரிய ஆவணங்களைக் காண்பித்து, நகைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், நகைகளை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.