தமிழகம்

தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு: பெரியாறு அணையில் 2-ம் கட்ட அபாய எச்சரிக்கை

என்.கணேஷ்ராஜ்

தேனி: தொடர் மழையால் மூல வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்தும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பெரியாறு அணையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு பகுதியில் வெள்ளி மலை, அரசரடி, மேகமலை, சந்தனக்காடு, உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெய்யும் மழை சிற்றாறுகளாக உருவாகி மூல வைகை ஆறாக பெருக்கெடுக்கிறது.

இந்த நீர் வாலிப்பாறை, துரைச்சாமிபுரம், சங்ககோனாம்பட்டி, பள்ளபட்டி வழியாக அம்பாசமுத்திரத்தை கடந்து வைகை அணைக்குச் செல்கிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகையில் இன்று அதிகாலை முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வைகை அணைக்கான நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு விநாடிக்கு 634 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 3065 கன அடியாக உயர்ந்தது. இதனால் காலையில் 61 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 62 அடியானது.

பெரியாறு அணையைப் பொறுத்தளவில் நேற்று 136.20 அடி நீர்மட்டத்துடன், 1,312 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,135 கன அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 138.65 அடியாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து. கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வராக நதி, சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட வைகையின் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT