தமிழகம்

காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: சிஐடியூ மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: காசிமேடு, எண்ணூர் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது என்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) தலைவர் ஆர்.லோகநாதன், சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை விதித்துள்ளது. ஆமைகள் இனப்பெருக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும், இந்தத் தடையின் காரணமாக சென்னை மாநகரின் பெரும்பாலான சிலைகள் வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதிக்குத் திருப்பிவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. காசிமேடு மற்றும் எண்ணூர் பகுதியில் அதிகப்படியான சிலைகளைக் கரைப்பது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். கடல் நீர் மாசு உள்ளிட்ட சுற்றுச்சழல் சீர்கேடு ஏற்படும். காசிமேடு மற்றும் எண்ணூர் என்பது ஒரு சாதாரண கடற்கரை அல்ல, அது லட்சக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதார மையம்.

கடலில் கரைக்கப்படும் சிலைகளின் எஞ்சிய பாகங்களான மரச்சட்டங்கள், மூங்கில் மற்றும் இரும்புக் கம்பிகள் கரையோரம் மற்றும் நடுக்கடலில் தேங்குகின்றன. கடலுக்குச் செல்லும் மீனவர்களின் படகுகளில் இவை மோதி சேதத்தை ஏற்படுத்துவதோடு, பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகளைக் கிழித்து விடுகின்றன. ரசாயனக் கழிவுகளால் மீன் வளமும் பெருமளவு குறைந்து, மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.

எனவே காசிமேடு, எண்ணூர் கடலில் சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது. செயற்கை குளங்களை அமைத்து, சிலைகளை அங்கு மட்டுமே கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு வழியின்றி கடலில் சிலைகளை கரைத்தால், கழிவுகளை 24 மணி நேரத்துக்குள் அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT