தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு நேற்று ராமேசுவரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்குச் சென்றன.
ராமேசுவரம்: தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு நேற்று மீன்பிடிக்க ஆயிரக்கணக்கான விசைப் படகுகளில் தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர்.
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்கள் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகும். இதனால் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுடன் இந்தத் தடைக்காலம் முடிந்ததால் தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இதன்ஒருபகுதியாக மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் இருந்து 800 விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 61 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்குச் சென்றனர்.
முன்னதாக ராமநாதபுரம் மீன்வளத்துறை விடுத்த செய்திக்குறிப்பில், விசைப்படகு மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்றே செல்ல வேண்டும். மீறினால் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டக் கூடாது. பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.