ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘கடந்த ஒரு மாத காலத்தில் ராமேசுவரம் விசைப்படகுகள் 3 கைப்பற்றப்பட்டு 29 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆறு மாதம், ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை கைதிகளாக 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண்வதற்கு, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து 2026-ம் ஆண்டு வரையிலும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ள விசைப் படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 30 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டமும், செப்டம்பர் முதல் தொடர் உண்ணா விரதப் போராட்டமும் நடத்துவது என தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.