கோப்புப்படம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் மீன்களை வழங்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜவகர் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் மீன் வளங்களைப் பெருக்கி அதன் மூலம் ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மீன் தொடர்புடைய தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி பிராந்தியத்தில் பாகூர் பகுதி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் போலகம் தொழிற்பேட்டையில் மீன்வள பூங்கா அமைத்திடவும், ஏனாம் பிராந்தியத்தில் கல் நண்டு வளர்ப்பு முறையினை மேம்படுத்திடவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை வழங்கினார். இந்த திட்டங்களுக்கு ஆணையம் தக்க நிதியுதவி அளித்திடும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் முதன் முதலாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவினை மீன்களுடன் சேர்த்து வழங்கிட புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் ஒரு பள்ளியில் பரிச்சார்த்த முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆணையத்தில் இணை இயக்குநர் கந்தன், சென்னை பிராந்தியத்தின் தலைவர் அருள்மூர்த்தி, மீனவளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் கோவிந்தசாமி, ஏனாம் மீன்வள துணை இயக்குநர் கொந்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.