சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முப்படை வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், போலீஸார், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினாவில் முப்படைகளில் முதல் கட்ட அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது. குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.
தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த வாகனங்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொள்கிறார். இதற்கான முதற்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை 7 மணியளவில் உழைப்பாளர் சிலை எதிரே காமராஜர் சாலையில் நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப் படை, தமிழக காவல் துறை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, பிற மாநில போலீஸார் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முதல் கட்ட அணிவகுப்பு ஒத்திகையில் நேற்று கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தி பார்க்கப்பட்டது. இந்த ஒத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6 மணிமுதல் நிகழ்ச்சி முடியும் வரை மெரினாவில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த கட்ட ஒத்திகை ஜன. 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இதே இடத்தில் நடைபெற உள்ளது.