சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான ஆவணங்கள், கோப்புகள். (அடுத்த படம்) அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள், பயணிகள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு போர்டிங் பாஸ் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் டெர்மினல்-2, இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் தனியார் ஏர்லைன்ஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12 மணியளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் சூழ்ந்தது.
உடனே மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், அவசர காலதீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். மேலும் சென்னை விமான நிலையத்தின் 2 தீயணைப்பு வாகனங்கள், மாநில அரசின் 2 வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்து, புகை மண்டலத்தையும் வெளியேற்றினர்.
பயணிகளுக்கு மூச்சுத் திணறல்: முன்னதாக புகையில் சிக்கித் தவித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புகை மண்டலத்தால் சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சர்வதேச முனையத்தில் புறப்பாடு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “தனியார் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால், சிறிய தீ விபத்து ஏற்பட்டது. புகை மண்டலத்தால் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்துவிட்டது. தீ விபத்து குறித்து விசாரணை நடக்கிறது” என்றனர். சென்னை விமான நிலையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னை விமான நிலைய சர்வதேச முனையம் டெர்மினல்-2 புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு விமான நிறுவன அலுவலகத்தில், ஆவணங்கள் வைத்திருக்கும் ஸ்டோர் ரூமில், திடீரென ஏற்பட்டமின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
அது உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. விமான சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. தீ விபத்து குறித்து முறையான விசாரணை நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் தீ விபத்தால், தனியார் விமான நிறுவன அலுவலகத்தில் இருந்த பல்வேறு முக்கிய கோப்புகள், ஆவணங்கள் எரிந்துவிட்டன. 2 விமான நிலைய ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.