சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயை, தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அணைத்தனர்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் வளாகத்தில் தேங்கி கிடந்த கழிவுப் பொருட்களில் நேற்று திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, அருகில் இருந்த குடோன்களுக்கும் பரவியது. இதனால், அங்கு இருந்த கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததுடன், கரும்புகை அதிகளவில் வெளியேறியது. அந்த புகை தண்டையார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சூழ்ந்தது.
இதனால், அப்பகுதி பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர் இதற்கிடையே, சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து, தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கரும்புகை சூழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் அச்சத்தை ஏற்படுத்தியது.