சென்னை: அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்பாபு - தனலட்சுமி தம்பதியினர். ஆனந்த்பாபு மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் கர்ப்பமாக இருந்த தனலட்சுமி, பிரசவ தேதி தாண்டியதை அடுத்து, புரசைவாக்கத்தில் இயங்கி வரும் மாநகராட்சி 24 மணி நேர அவசர மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக நேற்று முன்தினம் வந்தார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தனலட்சுமியை உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர்.
ரேடியன்ட் வார்மர் பெட்டி
அங்கு தனலட்சுமிக்கு நேற்று சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை சுத்தம் செய்து அதன் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க மருத்துவர்கள் `ரேடியன்ட் வார்மர்' பெட்டியில் குழந்தையை வைத்திருந்தனர்.
இந்நிலையில் வார்மரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக, குழந்தை வைக்கப்பட்டிருந்த பெட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த செவிலியர்கள் குழந்தையை அதிலிருந்து எடுக்க முயன்றனர்.
ஆனால் சில நொடிகளில் பரவிய தீயால், குழந்தையின் முதுகு மற்றும் தொடை பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு குழந்தையின் தீக்காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள மின் சாதனங்களின் தரக் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் என குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு, மருத்துவமனையிலேயே ஆபத்து நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.