படங்கள்: ம.பிரபு
அண்ணாசாலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் 2, 3-வது தளத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. 8 தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தின் பவர் ரூம் என்று அழைக்கப்படும் 2-வது தளத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது உதவி கணக்காளர் மன்சூர், கட்டிடத்தின் 6-வது தளத்தில் சிக்கி இருந்தார். இதுகுறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் பேரில், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், கீழ்பாக்கம், மயிலாப்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி உள்பட 8 இடங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் வந்தன.
பிராண்டோ ஸ்கை லிப்ட் மூலமாக, சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, 6-வது மாடியில் இருந்த அந்த ஊழியரை பத்திரமாக மீட்டனர். 2-வது தளத்தில் ஏற்பட்ட தீ, 3-வது தளத்தில் (நிர்வாக பிரிவில்) மளமளவென பரவி, அங்கு இருந்த மேஜை, நார்காலி உள்ளிட்ட பொருட்களை நாசமாக்கின. இந்த தீயால் கட்டிடத்தின் 8 தளங்கள் மட்டுமின்றி, அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழந்தது.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் போராடி, தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்றது. மேலும், மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேவை முடக்கம்: தீ விபத்தில் கட்டிடத்தின் 2 மற்றும் 3-வது தளத்தையும் முழுமையாக சேதமடைந்தன. கட்டிடத்தின் 4, 5-வது தளங்களில் தொலைதொடர்பு சாதனங்கள் இருந்தன. தீ விபத்தால் தொலைதொடர்பு சேவையின் கட்டுப்பாட்டு அறை,சர்வர் பொருட்கள், ஏசி, கேபிள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தீ விபத்தால், இணைய சேவை, செல்போன், லேண்ட்லைன் சேவை முடங்கியது. தீ விபத்து குறித்து, தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம் (பி.எஸ்.என்.எல்) தலைவர் சி.கே. மதிவாணன் கூறுகையில்,” இந்த கட்டிடத்தின் தற்போது 2-வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, 1997-ம் ஆண்டு ஜனவரியில் தீவிபத்து ஏற்பட்டது. அதன்பிறகு, மீண்டும் இக்கட்டிடம் கட்டப்பட்டது. இந்த தீவிபத்துக்கு நிர்வாகத்தின் கவனகுறைவே காரணம். பாதுகாப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றவில்லை" என்றார்.
பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறுகையில்,"தீவிபத்தால் சுமார் 2 கிமீ சுற்றுவட்டார தொலைவில் பி.எஸ்.என்.எல் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்" என்றனர்.
தீ விபத்து குறித்து விசாரணை: பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தீ விபத்தால், சென்னை, தமிழகத்தின் பிற பகுதிகள், ஆந்திரப் பிரதேசம்,தெலங்கானா ஆகிய இடங்களில் தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகள் மற்றும் அவசர சேவைகளையும் பாதித்தது.உடனடியாக, அவசர சேவைகள் மற்றும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கான அழைப்புகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், தெலங் கானா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தொலைபேசி அழைப்பு, இணைய சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம், சென்னையில் சேவைகள் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.