காஞ்சிபுரம்: பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்தினரின் எதிர்காலப் பாதுகாப்புக்காக, 2011-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் சார்பில் 'காக்கி உதவும் கரங்கள்' அமைப்பு மூலம் திரட்டப்பட்ட ரூ.26.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு காவலராகத் தேர்வாகி, தாம்பரம் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் ஆர்.ராஜா (37). இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, மறைந்த காவலர் ராஜாவின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கும், அவரது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் உதவும் நோக்கில், அவருடன் பணியில் சேர்ந்த 2011-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் 'காக்கி உதவும் கரங்கள்' மூலம் நிதி திரட்டினர்.
அதன்படி, காவலர் ராஜாவின் மகள்களான ரக்ஷ்னா (10), வர்சிகா சாய் (6) ஆகிய இருவரின் பெயரிலும் அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சமும், அவரது தாயார் ரங்கம்மாள் மற்றும் மனைவி ராதிகா ஆகியோரின் பெயரில் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சமும் அஞ்சலக சிறுசேமிப்பில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டன.
மேலும், தாயார் மற்றும் மனைவிக்கு உடனடி குடும்பச் செலவுகளுக்காக தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.15,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.26,15,000 மதிப்பிலான நிதி உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அத்துடன் சிறுசேமிப்புத் திட்ட முகவர் ஜே.லட்சுமி என்பவர் சார்பில் குழந்தைகள் இருவருக்கும் ரூ.6,500 உதவித் தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) ஜி.சஷாங் சாய். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் அஞ்சலக சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் ரொக்க உதவிகள் மறைந்த காவலரின் குடும்பத்தாரிடம் முறைப்படி வழங்கப்பட்டன.