இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானதை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். உடன், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், வி.தர் ஆகியோர்.படம்: ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் 74.07 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற உள்ள சட்டப்பேரவைதேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை விண்ணப்பித்தால்கூட, தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2025 அக்.27-ம் தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு கடந்த டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5.44 கோடி பேர் மட்டுமே இருந்தனர்.
உயிரிழந்தவர்கள் 26.96 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66.45 லட்சம் பேர், இரட்டைப் பதிவு வாக்காளர்கள் 3.98 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஜன.30-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 27.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 4.23 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் தமிழகம் முழுவதும் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 12.22 லட்சம் பேர் அதிகம் உள்ளனர். வாக்காளர் பட்டியலை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தொடர் திருத்தக் காலம் 23-ம் தேதி (நேற்று) முதல் அமலில் உள்ளது.வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க படிவம்-6, திருத்துவதற்கு படிவம்-8, நீக்குவதற்கு படிவம்-7 வழங்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம், Voter Helpline என்ற செயலி மூலமாக மட்டுமின்றி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மனுதாக்கல் முடியும் வரை விண்ணப்பம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்வரை விண்ணப்பித்தால்கூட, தகுதி உள்ள வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும். இதுபற்றி மேலும் விவரம் அறிய, மாவட்ட தொடர்பு மையங்களை ‘1950’ என்ற இலவச எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.
முதல்முறையாக வாக்காளராக பதிவுசெய்தவர்கள், திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய வாக்காளர் அட்டை அச்சிட்டு, அவர்களது முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும். வாக்காளர் அட்டை அச்சிடும் பணி தொடங்கிவிட்டது. 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் ஆணையர் 26-ல் வருகை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு வரும் பிப்.26-ம் தேதி சென்னை வருகிறது. மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்கள், மத்திய முகமைகளான வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, துணை ராணுவ அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக மத்திய பாதுகாப்பு படையின் 50 கம்பெனிகளை உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த 50 கம்பெனிகளும் மார்ச் 10-ம் தேதி தமிழகம் வர உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், வி.ஸ்ரீதர், இணைதலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் அறிவிக்கும்போது, வாக்காளர் பட்டியலில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்தனர். நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 74,07,207 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இளம் வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர்
இறுதி பட்டியலின்படி, தமிழகத்தில் 18-19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர், மாற்றுத் திறன் வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8.99 லட்சம் பேர் உள்ளனர்.
அதிக வாக்காளர்கள்: அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக, 31.57 லட்சம் பேருடன் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்திலும், 28.30 லட்சம் பேருடன் சென்னை மாவட்டம் 2-ம் இடத்திலும் உள்ளன. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 5.36 லட்சம் வாக்காளர்கள், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் 4.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்கள்: குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்ட வரிசையில், 5.22 லட்சம் பேருடன் அரியலூர் மாவட்டம் முதல் இடத்திலும், 5.27 லட்சம் பேருடன் நாகப்பட்டினம் மாவட்டம் 2-ம் இடத்திலும் உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் 1.16 லட்சம் வாக்காளர்கள், எழும்பூர் தொகுதியில் 1.34 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.