சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அதன் அடிப்படையில் நாளை தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்குகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொங்கியது. ஏப்.6-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இதன்படி 234 தொகுதிகளில் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்தொடர்ச்சியாக 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,072 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2,464 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதனால் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளது. நேற்று வரை 70-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்திரும்பப் பெறப்பட்டன. இன்று மாலை 3 மணியோடு வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
அதன் பின்னர் தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இன்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளது. நாளை (ஏப்.9) அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்குகின்றன.
அதற்கடுத்து பயிற்சிக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்கள் இடம்பெறுவர்.
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் இயந்திரங்கள் சேர்க்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன.
இதற்கான பயிற்சியும் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூத் ஸ்லிப் நாளைமுதல் வழங்கப்பட உள்ளது. ஏப்.17-ம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.