சென்னை: உடல் நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் பத்ம ஸ்ரீ பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவர் உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவருடைய மகன் மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் மனமுடைந்த பாரதிராஜா, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பெற்று மலேசியாவில் வசிக்கும் தனது மகள் ஜனனியுடன் சில மாதங்கள் தங்கி இருந்தார். அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடர்ந்தார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமானது. இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் அவருடைய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவருடைய உடல் நீலாங்கரை வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் நேரில் வந்து பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, பாரதிராஜா உடலை பார்த்து கண்ணீர் விட்டு விஜய் அழுதார்.
அவருடைய குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அங்கிருந்த நடிகை ராதிகா சரத்குமாரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார். தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் ராஜ்மோகன், சி.டி.ஆர்.நிர்மல் குமார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, வி.கே.சசிகலா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, சிவகுமார், நாசர், சூர்யா, சித்தார்த், நடிகைகள் சுகன்யா, ராதா, சுஹாசினி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன், இயக்குநர்கள் மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று இறுதிச் சடங்கு: அஞ்சலிக்குப் பிறகு பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து வத்தலகுண்டு அருகேயுள்ள அவருடைய காட்ரோட் தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை அவருடைய இறுதிச் சடங்கு நடக்கிறது.
அரசு மரியாதை: தமிழக முதல்வர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்ம உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.