தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். படம்: ம.பிரபு
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்கைகள் என மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 3.14 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், வாக்காளர் அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச்26-ம் தேதி வரை விண்ணப்பித்தால், தேர்தலுக்கு முன்பு, பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்.6 ஆகும். இதற்கிடையே, மார்ச் 31 (மாகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 3 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனுக்களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாளாகும்.
50 கம்பெனி துணை ராணுவம்: தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனையை தொடங்கியுள்ளன. தமிழகத்துக்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.
வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தேர்தல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம்வெளியிடப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம்.
ரூ.1.26 கோடி பறிமுதல்: மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கான அனுமதி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம். பிரச்சார அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிரச்சாரத்தின்போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏ.சிவஞானம், ஸ்ரீதர், இணை தலைமை தேர்தல் அதிகாரி மேனுவல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.