தமிழகம்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெங்கு தடுப்பூசி கள ஆய்வு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

த.அசோக் குமார்

தென்காசி: “நாட்டிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சல் தடுப்பூசி கள ஆய்வு கடையநல்லூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி களப்பயன்பாடு குறித்த ஆய்வு மற்றும் பல்வேறு விதமான கொசுவிரட்டிகள் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பது தொடர்பான ஆய்வு திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கிவைத்தார்.

மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே.ராஜீவ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறும்போது, “டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. கொசுப் புழுக்கள் ஒழிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து இதுவரை டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம்.

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஜப்பானில் உள்ள டக்கேடா என்ற தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இந்த தடுப்பூசிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளாக 3 மாத இடைவெளியில் எடுத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து 80 முதல் 90 சதவீதம் பாதுகாப்பாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இங்கிலாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டில் முதல் முறையாக இந்த தடுப்பூசியை அட்டவணையில் சேர்த்துள்ளனர்.

இந்தியாவில் ஜூலை மாதம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநிலமும் இந்த தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை.

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெங்கு தடுப்பூசியை மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன் முதல்கட்டமாக கடையநல்லூர் பகுதியை தேர்ந்தெடுத்து, தடுப்பூசி அறிமுகப்படுத்த உள்ளோம்.

ஏனெனில், இதற்கு முன்பு கடையநல்லூர் பகுதியில் டெங்குவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டிருந்தது. அதனால் கடையநல்லூர் பகுதியில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்திடம் பேசி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதற்கு அந்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஹேமந்த், சந்தோஷ் ஆகியோர் உறுதுணையுடன் இருந்தனர். அவர்கள் இருவரும் இங்கு வந்துள்ளனர். இங்கு அவர்கள் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்துள்ளோம்.

இந்த தடுப்பூசி விரைவில் கிடைக்க உள்ளது. டெங்கு நோயால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படக்கூடாது என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம். இந்த தடுப்பூசி மூலம் டெங்கு நோயால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஆய்வுக் குழுமம் ஏற்படுத்தி, மாவட்டத்துக்கு 20 அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேலும், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, தோலில் தடவும் கொசுவிரட்டி, மின்சாரம் மூலம் இயங்கும் வேப்பரைசர் மூலம் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க முடியுமா என்ற ஆய்வும் கடையநல்லூரில் மேற்கொள்ள இருக்கிறோம்.

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான சிகிச்சை அரசு மருத்துவமனையில் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT