ரவி, அய்யனார்
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (65). இவரது மகன் அய்யனார் (35). இருவரும் சென்னை கொடுங்கையூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 15 ஆண்டுகளாக கிணறு தூர்வாரும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சவுகார்பேட்டை பொன்னப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் இருந்த சுமார் மூன்றரை அடி அகலமும், 45 அடி ஆழமும் கொண்ட கிணற்றை தூர்வாருவதற்காக தந்தையும், மகனும் சென்றனர்.
முதலில் அய்யனார் கிணற்றுக்குள் இறங்கி பணியில் ஈடுபட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. மேலும், அவரிடம் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் ரவி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மகனை பார்ப்பதற்காக அவரும் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது ரவியும் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். கிணற்றுக்குள் தேங்கியிருந்த விஷவாயு தாக்கியதால் இருவரும் மயங்கி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் தந்தை-மகன் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கிணற்றுக்குள் இறங்குவது ஆபத்தான சூழ்நிலை இருந்ததால், உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றுக்குள் ரவி மற்றும் அய்யனார் இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து யானைகவுனி போலீஸார் விசாரணை நடத்தினர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.