செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய கூட்டுறவு நுகர்பொருள் வாணிபக் கழகம் (NCCF) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து NCCF மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். தங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.7.5 கோடி நிலுவையில் உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும் பணம் வழங்கப்படாததால், அடுத்த பருவ சாகுபடிக்குத் தேவையான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஏற்கெனவே விவசாயப் பணிகளுக்காக கடன் வாங்கியுள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையும் கிடைக்காததால் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளதாக கூறினர்.
இதையடுத்து, மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.